Sports
நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா : பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் யார் யார் ?
பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியா சார்பாக களமிறங்கியுள்ள வீரர்களில் ஏராளமானோர் இம்முறை பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கையை எட்டிப்பிடித்து வரலாறு படைக்குமா இந்தியா? என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் பதக்க வேட்கையுடன் இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 124 பேருடன் சென்ற இந்திய அணி ஒரு தங்கம் உட்பட 7 பதக்கங்களை கைப்பற்றியது.
இந்த முறை 7 வீரர்கள் குறைவு என்றாலும், பதக்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் அறுவடை செய்வதை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ளது இந்திய அணி.
இந்தியாவிற்கு நிச்சயம் பதக்கம் வென்று கொடுப்பார் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தங்க மகன் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்ததால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பின் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கத்தை நீரஜ் சோப்ரா பதிவு செய்துள்ளார். இந்த ஒலிம்பிக் தொடரில் 90மீட்டர் தொலைவு எரிவதே இலக்கு என்ற நீரஜ் சோப்ரா பாரிசில் தனது கனவை நனவாக்க காத்திருக்கிறார்.
பதக்க வாய்ப்பில் ஆடவர் ஹாக்கி அணியும் இடம் பிடித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்-ல் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இம்முறை ஹர்மன் பிரீத் தலைமையிலான இந்திய அணி , லீக் சுற்றை தாண்டிவிட்டாலே ஏறத்தாழ பதக்கத்தை உறுதி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மீதான எதிர்பார்ப்பும் இந்த தொடரில் அதிகரித்துள்ளது. சமீப காலமாக சிந்து ஃபார்மில் இல்லாவிட்டாலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் எழுச்சி பெறுவார் என நம்பப்படுகிறது.
அண்மையில் நடந்த பல மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்துள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணையும் பதக்க மேடையை காத்திருக்கின்றனர்.
குத்துச்சண்டையில் ஆறு வீரர்கள் தேர்வாகியிருந்தாலும் டோக்கியோவில் வெண்கலம் வென்ற லவ்லினா மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்ற நிகால் ஸரீன் ஆகியோர் இம்முறை நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்றே கணிக்கப்படுகிறது.
கடந்த 4 ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் குறைந்தது ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்திய அணியில், இம்முறை 5வீராங்கனைகள், ஒரு வீரர் என 6பேர் பதக்கத்திற்காக மல்லுக்கட்டவுள்ளனர். ஆகையால், மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் , கால்ஃப் விளையாட்டில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அதிதி இம்முறை பதக்கத்தோடு நாடு திரும்புவார் என்று இந்திய கால்ஃப் சங்கத்தலைவர் கபில் தேவ் நம்பிக்கையை வெளிப்படுத்யுள்ளார்.
டோக்கியோவில் பதக்க எண்ணிக்கையை தொடங்கிய பளுதூக்குதல் வீராங்கனை மீரா பாய் சானு மீதான எதிர்பார்ப்பும் இன்னும் குறையவில்லை.
துப்பாக்கிச்சுடுதலில் 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் விஜய் குமார் வெள்ளியும், ககன் நரங் வெண்கலமும் வென்ற நிலையில், ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை தவறிவிட்டனர். இம்முறை வச்ச குறி தப்பாது என 21 துப்பாக்கிசுடுதல் வீரர், வீராங்கனைகள் பதக்க கனவோடு பாரிஸில் மையம் கொண்டுள்ளனர்.
டேபிள் டென்னிஸ், டென்னிஸ், போன்ற மற்ற விளையாட்டுகளில் இந்தியா சார்பாக வீரர்கள் களமிறங்கினாலும், கடுமையான போட்டி இருப்பதால், பதக்கத்திற்காக போராட உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற இந்திய அணி, இம்முறை இரட்டை இலக்க பதக்கத்தை பதிவு செய்து வரலாறு படைக்க காத்திருக்கிறது.
- செய்தியாளர் மீனா.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!