Sports

பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அவமதிக்கப்பட்ட வில்வித்தை பயிற்சியாளர்... நடந்தது என்ன ?

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். வீரர்களுடன் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் உதவியாளர்களும் சென்றுள்ளனர்.

அந்த வகையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு ஆறு இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்கள் தென்கொரியாவை சேர்ந்த தங்கள் பயிற்சியாளர் பேக் வூங் கியுடன் பாரிஸ் சென்றுள்ளனர். ஆனால் பயிற்சியாளர் பேக் வூங் கி திரும்ப வருமாறு இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு பயிற்சியாளர் என்ற அடிப்படையில் பேக் வூங் கி-க்கு பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான அனுமதி கடிதத்தை அளிக்க முடியாது என கடைசி நேரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறிய நிலையில், இந்திய வில்வித்தை சங்கம் அவரை இந்தியாவுக்கு திரும்ப வருமாறு கூறியுள்ளது.

Archery Coach Baek Woong Ki

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பேக் வூங் கி, " ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை பிரிவில் இந்தியா முதல்முறையாக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கடந்த ஓராண்டாக உழைத்து வருகிறோம். ஆனால், வெளிநாட்டு பயிற்சியாளர் என்பதற்காக என்னை அங்கிருந்து நீக்கியது மிகப்பெரிய தவறு. இதனை ஏற்க முடியாது.

இந்திய வில்வித்தை வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ள நிலையில், அவர்களுடன் நான் இருக்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது. என்னால் இப்போது அவர்களுக்கு மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும். எனினும் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என நம்புகிறேன். இனி இந்திய அணியுடன் என்னால் தொடர முடியாது. நான் எனது நாடான தென்கொரியாவுக்கு செல்ல விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.