Sports

EURO 2024 காலிறுதி : ஜெர்மனியை வெளியேற்றிய ஸ்பெயின்... போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அசத்திய பிரான்ஸ் !

கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.

மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதிக்கு ஸ்பெயின், ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், இங்கிலாந்து,ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, துருக்கி ஆகிய அணிகள் முன்னேறின. தொடர்ந்து காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இதில் முதல் காலிறுதி போட்டியில் போட்டியை நடத்தும் நாடான ஜெர்மனியும், வலுவான ஸ்பெயின் அணியும் மோதின. ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் கோலை ஸ்பெயின் அடித்தது. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயினின் இளம்வீரர் யமால் கொடுத்த பந்தை ஓல்மா அட்டகாசமான கோலாக மாற்றினார்.

இதற்கு 89 வது நிமிடத்தில் ஜெர்மன் அணியின் விர்ட்ஸ் பதில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. அதில் ஆட்டம் முடிய சில நேரங்களே இருந்த நிலையில், 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஓல்மா கொடுத்த பந்தை மெரினோ கோலாக்கினார். இதற்கு ஜெர்மனியால் பதில் கோல் அடிக்க முடியாத நிலையில், ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு காலிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி இளம்வீரர் எம்பாப்பேயின் பிரான்ஸ் அணியை சந்தித்தது. இதில் ஆட்டத்தின் 90 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்த காலிறுதி ஆட்டமும் கூடுதல் நேரத்துக்கு சென்றது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டனர்.

இதில் தங்களது முதல் இரண்டு வாய்ப்புகளை இரு அணிகளும் கோலாகின. அடுத்து பிரான்ஸ் அணி மூன்றாவது வாய்ப்பையும் கோலாக்க, போர்த்துக்கல் அணியின் மூன்றாவது வாய்ப்பை கோலாக்க அந்நாட்டு வீரர் பெலிக்ஸ் தவறினார். ஆனால், தங்கள் அடுத்த இரண்டு வாய்ப்பையும் பிரான்ஸ் அணி கோலாக்க இறுதியில் 5-3 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Also Read: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 3 மணி நேரத்தில் 8 பேர் கைது... சென்னை காவல் ஆணையர் !