Sports

"இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்பம்தான்" - ரிக்கி பாண்டிங் கருத்து !

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து போன்ற வலிமையான அணிகள் இருந்த பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெற்றிருந்தது.

எனினும் வலிமையான நியூஸிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றிபெற்று அபார சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து வங்கதேச அணியையும் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிருதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

அரையிறுதியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தாலும், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் , உலகக்கோப்பையில் சிறப்பான வெற்றி உலக கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் மகத்தான பயணத்தின் ஆரம்பம் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர், " இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி எவ்வளவு பெரியது என்பதை வெளிநபர்கள் விளக்குவது மிகவும் கடினம். இந்த உலகக் கோப்பை தொடரில் அழுத்தம் நிறைந்த முக்கிய தருணங்களில் பெரிய அணிகளுக்கு எதிராக அவர்கள் சிறப்பாக ஆடினர்.

இது உலக கிரிக்கெட் தொடர் அவர்களது மகத்தான பயணத்தின் ஆரம்பம் தான். வரும் நாட்களில் பெரிய விஷயங்களை ஆப்கன் படைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த தொடர் முழுவதும் அவர்களுக்கு தொடக்க பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சில ஆண்டுகளில் மிடில் ஆர்டரை வலுப்படுத்தினால் உலகின் சிறந்த அணியாக இருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

Also Read: EURO 2024 காலிறுதி : ஜெர்மனியை வெளியேற்றிய ஸ்பெயின்... போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அசத்திய பிரான்ஸ் !