Sports

கோபா அமெரிக்கா : பெனால்டி வாய்ப்பை வீணடித்த மெஸ்ஸி... மீண்டும் அர்ஜென்டினாவை மீட்ட Emiliano martinez !

ஃபிபா உலகக்கோப்பை, யூரோ கோப்பை தொடருக்கு பின்னர் அதிகம் பேரால் பார்க்கப்படும் கால்பந்து தொடராக கோபா அமெரிக்கா தொடர் திகழ்ந்து வருகிறது. பொதுவாக தென்னமெரிக்க நாடுகளுக்கான தொடராக இருந்தாலும் இதில் வேறு கண்டத்தை சேர்ந்த நாடுகளும் அழைப்பு ரீதியாக பங்கேற்று வருகின்றது.

இந்த முறை இந்த கால்பந்து தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோபா அமெரிக்கா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த தொடரில் வட அமெரிக்காவை சேர்ந்த அணிகளும் பங்கேற்கவுள்ளது.

அந்த வகையில் தென்னமெரிக்காவை சேர்ந்த 10 நாடுகளும் வட அமெரிக்காவை சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்கிறது. உலககோப்பைகளை அதிகம் முறை வென்ற அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடர் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.

US vs Uruguay

இந்த தொடரில் போட்டியை நடத்தும் அமெரிக்கா லீக் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேற அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் பிற முக்கிய அணிகளான அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, கொலம்பியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

தொடர்ந்து முதல் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ஈகுவடார் அணியை சந்தித்தது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய அர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கோல் அடித்தது.

பின்னர் இறுதிக்கட்டம் வரை ஈகுவடார் கோல் அடிக்காத நிலையில், 90வது நிமிடத்தின் கூடுதல் நேரத்தில் ஈகுவடார் அணியின் கெவின் ரோட்ரிக்ஸ் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமனுக்கு கொண்டுவந்தார். கோபா அமெரிக்க தொடரில் இறுதிப்போட்டிக்கு மட்டுமே கூடுதல் நேரம் உண்டு என்பதால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது.

இதில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி தனது அணிக்கான முதல் வாய்ப்பில் அடித்த பந்தை ஈகுவடார் அணி கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் ஈகுவடார் அணியின் முதல் இரண்டு பெனால்டி ஷூட்டை தடுத்தார்.

மெஸ்ஸியை தவிர அர்ஜென்டினா அணியின் பிற வீரர்கள் தங்கள் வாய்ப்பில் கோல் அடிக்க இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Also Read: EURO 2024 : இன்று தொடங்குகிறது காலிறுதி போட்டி... மல்லுக்கட்டும் சாம்பியன் அணிகள் !