Sports

EURO 2024 : இன்று தொடங்குகிறது காலிறுதி போட்டி... மல்லுக்கட்டும் சாம்பியன் அணிகள் !

கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.

மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் இறுதி லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பரபரப்பாக நடந்த சூப்பர் 16 சுற்று போட்டிகளும் நேற்று முடிவுக்கு வந்தன. தொடர்ந்து இன்று முதல் முக்கியத்துவம் வாய்ந்த காலிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன.

காலிறுதிக்கு போட்டியில் ஸ்பெயின் அணி ஜெர்மனி அணியையும், போர்த்துக்கல் அணி பிரான்ஸ் அணியையும், இங்கிலாந்து அணி ஸ்விட்சர்லாந்து அணியையும், நெதர்லாந்து அணி துருக்கி அணியையும் சந்திக்கவுள்ளது.

இந்த தொடரின் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி சூப்பர் 16 சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதே போல, பெல்ஜியம் அணி பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரிட்டன் தேர்தல் : இடதுசாரி வேடத்தில் இருக்கும் வலதுசாரி? - யார் இந்த புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்?