Sports

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்தியா மட்டுமே இன்னும் ஒப்புதலை வழங்கவில்லை... ICC தகவல் !

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது குறித்து இந்தியா தவிர அனைத்து நாடுகளும் தங்கள் ஒப்புதலை அளித்துள்ளதாக ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் பேசுகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது குறித்து பிசிசிஐ தவிர்த்து மற்ற 7 நாடுகளும் தங்கள் ஒப்புதலை அளித்துவிட்டன.

வழக்கமாக எந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிராக முடிவு எடுக்குமாறு ஐசிசி தரப்பில் வலியுறுத்தப்படாது. இதனால் பிசிசிஐ தரப்பில் விரைவில் அரசிடம் அனுமதி கேட்டு முடிவை கூறுவார்கள்"என்று கூறியுள்ளார்.

Also Read: நீட் முதல் சட்டத் தேர்வு வரை... பாஜக அரசின் அலட்சியம்... கேள்விக்குறியாகும் தேர்வு நடைமுறைகள் !