Sports

மீண்டும் இந்திய அணியில் சாய் சுதர்சன் : புயல் காரணமாக தமிழ்நாடு வீரருக்கு அடித்த யோகம் !

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அங்கும் தனது திறமையை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது.

அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-ம் இடம் பிடித்தார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க்கவுள்ளது. இதற்காக சுப்மான் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர்.

ஆனால், தற்போது கரீபியன் நாடுகளில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக அங்கு இருக்கும் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோரால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பதில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்திக் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read: மீண்டும் IPL தொடரில் தினேஷ் கார்த்திக் : பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி !