Sports

T20 தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடர்... தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய மகளிர் அணி !

தென்னாபிரிக்க மகளிர் அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மா இரட்டை சதமும், ஸ்மிருதி மந்தனா சதமும் விளாசினர். இவர்களோடு பிற வீராங்கனைகளுக்கு சிறப்பாக ஆட முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்து டிக்ளர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 84.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆனது. 337 ரன்கள் பின்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 4வது நாளில் 10 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து 37 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை களம் இறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்ற அறிவிப்பையடுத்து, போட்டியை காண 4 நாட்களும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளை காண 150 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read: சரத்பவார் அணிக்கு திரும்பிய கவுன்சிலர்கள்... பாஜகவை நம்பி சென்று சீரழிந்த அஜித் பவார் !