Sports

அரையிறுதியில் இந்தியா : உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்து அசத்தல் !

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்தியா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியது.

தொடர்ந்து அமெரிக்க அணியை வீழ்த்திய இந்தியா, இறுதி லீக் ஆட்டத்தில் கனடா அணியை சந்தித்தது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டி நடைபெறாத நிலையில், லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபார வெற்றிபெற்ற இந்திய அணி, வங்கதேச அணியையும் எளிதில் வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை சந்தித்தது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணியில் கோலி ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் ஆரம்பதில் இருந்து அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித் சர்மா 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அவரின் இந்த அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Also Read: நீட் கேள்வித்தாள் கசிவு: பழுதான டிஜிட்டல் பூட்டு வழியாக நடைபெற்ற மோசடி... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!