Sports

செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்த தமிழ்நாடு : விளையாட்டு தலைநகராகும் சென்னை !

உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தியது. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 187 நாடுகளைச் சோந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இந்த தொடருக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து அசத்தியது . அதோடு இந்த தொடரில் கலந்துகொண்ட சர்வதேச வீரர்கள் போட்டிக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பாராட்டி தள்ளியிருந்தனர். இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது. சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

இந்த நிலையில், தற்போது செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து அறிக்கை அனுப்பியுள்ளது. செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலக சாம்பியன் டிங் லிரனுடன் கேண்டிடேட்ஸ் சாம்பியனும் தமிழ்நாடு கிராண்ட்மாஸ்டருமான குகேஷ் மோதவுள்ளார்.

இந்த போட்டியை நடத்த டெல்லி, சிங்கப்பூரில் நடத்த அந்தந்த மாநில அரசுகள் 31ஆம் தேதி சர்வதேச சதுரங்க சம்மேளனத்திற்கு அறிக்கை அனுப்பிய நிலையில், போட்டியை நடத்த தமிழ்நாடு கடந்த 29ஆம் தேதியே முழு அறிக்கையை அனுப்பியுள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தியதால் இந்த போட்டியை நடத்த சென்னைக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: "போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் தயார்" - அமெரிக்க அதிபர் அறிவிப்பு !