Sports

"ருதுராஜை கேப்டனாக CSK அணியின் உரிமையாளர்கள் தேர்வு செய்யவில்லை"- CEO காசி விஸ்வநாதன் கூறியது என்ன ?

சென்னை அணிக்கு கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் தோனி தலைமை தாங்கி நிலையில் நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.ரஞ்சி கோப்பை தொடர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வந்தார்.

அதோடு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வென்றுகொடுத்தார். இதன் காரணமாக அவர் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் சென்னை அணி இந்த தொடரில் பிளே ஆஃப் தொடருக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், ருதுராஜை கேப்டனாக சென்னை அணியின் உரிமையாளர்கள் தேர்வு செய்யவில்லை என அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடத் தொடங்கியபோதே, அடுத்த கேப்டனாக அவர் வருவார் என நிர்வாகத்தில் இருந்தவர்கள் விவாதித்தோம். அவரால் ஒரு அணியை வழிநடத்த முடியும் என நம்பிக்கை வைத்தோம்.

இந்த சீசனில் பிளே ஆஃப் தொடருக்கு முன்னேறாமல் இருந்தாலும் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. சென்னை அணியை ருதுராஜ் சிறப்பாகவே வழிநடத்தியுள்ளார். கேப்டன்சி காரணமாக அவர் பேட்டிங்கில் எந்தப் பிரச்னையையும் சந்திக்கவில்லை. அந்த அழுத்தம் அவருக்குக் கொஞ்சம்கூட வரவில்லை. அதனால் வரும்காலங்களில் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கிறோம்.

மற்ற அணிகள் கேப்டனை மாற்றியபோது எவ்வளவு பிரச்னைகள் வந்தது என்று தெரியும். ஆனால் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக தோனிதான் தேர்வு செய்தார். இதனால் ரசிகர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். அவரை கேப்டனாக்கியது தோனியின் முடிவு. இதில் அணி உரிமையாளர்கள் தலையிடவில்லை. இதுவரை கிரிக்கெட் தொடர்புடைய எந்த முடிவுகளிலும் அணி நிர்வாகம் தலையிட்டதில்லை"என்று கூறியுள்ளார்.

Also Read: "தடுமாறிய எனக்கு உதவியர் தினேஷ் கார்த்திக்தான், அவர் அற்புதமான பேட்ஸ்மேன்" - விராட் கோலி நெகிழ்ச்சி !