Sports

"பும்ரா, ரஷித்கான் போன்ற பௌலர்கள் எல்லா அணிகளிலும் இல்லை" - Impact Player விதிமுறைக்கு கோலி எதிர்ப்பு !

உலகளவில் பிரபலமான விளையாட்டு தொடர்களில் ஒன்று ஐபிஎல். அதிலும் கிரிக்கெட் என்றாலே ஐபிஎல் என்று சொல்லும் அளவு சர்வதேச தொடர்களுக்கு இணையான வரவேற்பை உலகளவில் ஐபிஎல் தொடர் பெற்றுவருகிறது. இந்த தொடரில் ஆட சர்வதேச நட்சத்திர வீரர்கள் அனைவரும் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த ஐபிஎல் தொடரில் ரன் மழை குவிந்து வருகிறது. 30-க்கும் அதிகமான முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ள நிலையில், 6 முறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவு ரன்கள் குவிக்கப்பட்ட மைதானத்தை தாண்டி இம்பாக்ட் பிளேயர் விதிமுறை காரணமாக கூறப்படுகிறது. இந்த விதிமுறை காரணமாக கூடுதலாக ஒரு வீரரை சேர்த்துக்கொள்ளலாம் என்பதால் பேட்டிங் ஆடும் அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கக்கூடும் என்பதால் ஆரம்பகட்ட வீரர்கள் தைரியமாக அட்டாக்கிங் கிரிக்கெட்டினை ஆடுகின்றனர்.

எனினும், இந்த விதிமுறையால் ஆல் ரௌண்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது என ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரும் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு விராட் கோலியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்ட பின்னர் ஒவ்வொரு பந்தும் 4, 6-க்குச் செல்லும் என நினைக்கும் நிலைக்கு பௌலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தரமான கிரிக்கெட் போட்டிகள், இப்படி ஒரு சார்பாக இருக்கக் கூடாது. இது பந்துவீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

எல்லா அணியிலும் பும்ரா, ரஷித் கான் போன்ற சிறந்த பௌலர்கள் இல்லை. இந்த விதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஜெய்ஷா கூறியிருக்கிறார், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்"என்று கூறியுள்ளார். முன்னதாக ஜெய்ஷா இம்பாக்ட் பிளேயர் விதி நிரந்தரமானது அல்ல என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?