Sports

அமெரிக்காவில் இரண்டே மாதத்தில் கட்டப்பட்ட சர்வதேச மைதானம் : பிரமாண்டமாக நடைபெறும் T20 உலகக்கோப்பை !

அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டியும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் விளையாடவுள்ளது. ஜூன் 5ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நியூயார்க் நகரில் வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா A பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பிரிவில் கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. தனது பிரிவில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நியூயார்க் புறநகரில் உள்ள நாசாவு கவுண்டி என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியானபோது இங்கு மூன்றாம் தரமான மைதானமே இருந்தது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்வரை மைதானத்துக்கான எந்தவித கட்டமைப்பும் இல்லாமல் இருந்தது. இதனால் போட்டி எப்படி நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இரண்டே மாதங்களில் 34,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் கோல்ஃப் மற்றும் கால்பந்து மைதானத்தில் பயன்படுத்தப்படும் பெர்முடா வகை புற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பயன்படுத்தப்படும் ஆடுகளம் இங்கு கொண்டுவரப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மைதானம் கடந்த 15-ம் தேதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மடங்கள் தற்காலிகமானது என்றும், போட்டிகள் முடிந்ததும் இந்த பார்வையாளர்கள் மடங்கள் காலிசெய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரம் உலகக்கோப்பை போட்டிகள் முடிந்ததும் நிரந்தரமான பார்வையாளர் மடங்கள் கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது .

Also Read: தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் IPL-ல் விளையாடுவார் - CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கருத்து !