Sports

முதல் முறை IPL அறிமுகம் : ஈழத்தமிழர்களின் நாயகனாக அவதரித்துள்ள யாழ்ப்பாண வீரர் - யார் இந்த வியாஸ்காந்த் ?

இந்தியாவில் தமிழர்களில் மக்கள்தொகை 6 சதவீதம்தான். ஆனால், இங்கு ஸ்ரீகாந்தில் இருந்து தற்போது சாய் சுதர்சன் வரை எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியை அலங்கரித்துள்ளனர். ஆனால் நமது அண்டை நாடான இலங்கையில் 16 சதவீதம் மக்கள் தமிழர்கள். அதாவது அங்குள்ள 20 பேரில் இருவர் தமிழர்கள் என்றாலும் இலங்கையின் தமிழ் கிரிக்கெட் வீரர்களின் நிலையோ வேறு. திறமை இருந்தும் இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனவர்கள் என பெரிய பட்டியலே போடலாம்.

அதிலும் இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 1982-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த அணியில் மட்டும் சுமார் 200க்கும் அதிகமான வீரர்கள் ஆடியுள்ளனர். ஆனால் இதில் 10 பேர் கூட தமிழர் இல்லை என்பதுதான் நிசத்தியமான உண்மை. இலங்கை தேசிய அணியில் தமிழர்கள் இடம்பிடிக்காததற்கு இலங்கை உள்நாட்டு போரே காரணம் என பலர் கூறுவர்.

விடுதலை புலிகளின் எழுச்சிக்கு பின்னர் உள்நாட்டு போரினால் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு - கிழக்கு பகுதிகள் பாதிக்கப்பட்டது உண்மை என்றாலும், விடுதலை புலிகளுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி இலங்கை தேசிய அணியில் தமிழர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது என்பதே உண்மை.

இத்தனைக்கும் இலங்கையில் அதிதீவிர கிரிக்கெட் காதலர்களாக தமிழர்களே ஆரம்ப காலத்தில் இருந்து அறியப்பட்டு வருகின்றனர். ஆங்கிலேயரிடம் இருந்து கிரிக்கெட்டை முதலில் கற்றுக்கொண்டவர்களும் தமிழர்களே. எனினும் இலங்கை தேசிய அணியில் மட்டும் தமிழர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்துள்ளது. ஸ்ரீதர் ஜெகநாதன், ஜெயப்ரகாஷ்தரன், வினோதன் ஜோன், மரியோ வல்லவராயன் என அத்திப்பூத்தாற்போல சில தமிழர்கள் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர் என்றாலும் இவர்கள் யாரும் தமிழர் அதிகம் வாழும் வடக்கு - கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரன் கூட வடக்கு - கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கிடையாது.

இதனால் நம்மவர்கள் நமது தேசிய அணியில் இடம்பெறவில்லையே என்ற ஏக்கம் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈழத்தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் எழுச்சி ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலேயே தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் புகழ்பெற்ற யாழ் மத்திய கல்லூரியில் பயின்றபோதே தனது ஆட்டத்தின் காரணமாக பல முன்னணி வீரர்களின் கவனத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு தனது 19 வயதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் அணிக்காக ( யாழ்ப்பாணம் இசுடாலியன்சு ) விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் வியாஸ்காந்த்.

தொடர்ந்து தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்த வியாஸ்காந்த், 2022 லங்கா பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தினை பெற்றார். மேலும் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணி அந்த ஆண்டு கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். இதனால் வியாஸ்காந்த் மீது சர்வதேச லீக் அணிகளின் கவனம் திரும்பியது.

தொடர்ந்து அடுத்த ஆண்டே வங்கதேச பிரீமியர் லீக் தொடர் சட்டோகிராம் சாலஞ்சர்ஸ் அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச லீக் தொடரில் MI எமிரேட்ஸ் அணிக்காகவும் களமிறங்கி அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தினார். வியாஸ்காந்தின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இலங்கை தேசிய அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. அந்த தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் சர்வதேச போட்டியில் களமிறங்கிய முதல் யாழ்ப்பாண வீரர் என்ற பெருமையை வியாஸ்காந்த் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த இலங்கை வீரர் ஹசாரங்கா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதில் விஜயகாந்த் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

தொடர்ந்து கடந்த வாரம் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் விஜயகாந்த்க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட வியாஸ்காந்த் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். வியாஸ்காந்தின் இந்த தொடர் வெற்றிகளுக்கு பின்னர் டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் ரிசர்வ் வீரராக வியாஸ்காந்த் தேர்வாகியுள்ளார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்லும் லெக்ஸ்ஸ்பின் பந்துவீச்சாளரான வியாஸ்காந்த் கிரிக்கெட்டில் பெரிய வீரராக வருவார் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் எப்படி கிரிக்கெட் கொண்டாடப்படுகிறதோ, அதே போல ஈழத்திலும் கிரிக்கெட்டே முக்கிய விளையாட்டாக கொண்டாடப்படுகிறது. அதிலும் இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கிரிக்கெட் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. இத்தகைய சூழலில், முதல் முறையாக தங்களில் ஒருவர் சர்வதேச அளவில் ஜொலிப்பதை கண்டு ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியில் இதனை கொண்டாடி வருகின்றனர். இதுவரை பிறரை கொண்டாடி பழகியவர்களுக்கு தங்களில் ஒருவர் அந்த இடத்துக்கு வந்ததை எப்படி உணர்வர் என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதனை புரிந்துகொள்ளவே முடியும். பொதுவாக விளையாட்டு என்பது வலியை மறக்கும் தன்மை கொண்டது என்பர். அந்த வகையில் பல ஆண்டுகளை உள்நாட்டு போரால் தொலைத்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியாக வியாஸ்காந்த் வந்துள்ளார் என்றே இதனை குறிப்பிட முடியும். தமிழர்களின் வடக்கு - கிழக்கு பகுதியில் இருந்து சர்வதேச அளவில் ஜொலிக்கும் முதல் வீரராக வேண்டுமானால் வியாஸ்காந்த் இருக்கலாம். ஆனால் பலரின் கனவை நனவாக்கிய வியாஸ்காந்த் வழியில் வருங்காலத்தில் ஏராளமான ஈழ தமிழர்கள் சிரிக்கெட்டில் ஜொலிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Also Read: "ஹர்திக் பாண்டியாவுக்கு முழு ஆதரவு என ரோஹித் கூறாதது ஏன் ?" - ஆரோன் பின்ச் கேள்வி !