Sports
அப்போது தோனி, இப்போது KL ராகுல்: சர்ச்சையில் அணி உரிமையாளர்... வீரர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு என்ன?
கடந்த லக்னோ - ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி நிர்ணயித்த 165 ரன் இலக்கை வெறும் 9.4 ஓவர்களில் எட்டி வெற்றிபெற்றது ஹைதராபாத் அணி. இத்தனைக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்றது லக்னோ அணிதான். ஆனால், அவர்கள் முதலில் ஆடியபோது ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமானது போல தெரிந்தது. ஆனால், ஹைதராபாத் ஆடியபோது அது தார்ரோடு ஆடுகளம் போல முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமாக தெரிந்தது.
ஐபிஎல் அணியை எடுத்துக்கொண்டால் அந்த அணியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் மட்டும் இருப்பதில்லை. பிற வீரர்களின் திறமையை அறிந்து அதற்கேற்ப திட்டமிடும் குழுவினரும், மைதானம் மற்றும் சுற்றுசூழல் குறித்து அறிந்து அதற்கேற்ப தங்கள் அணிகளுக்கு ஆலோசனை வழங்குவர். இதற்காக பல லட்சங்களை அணி உரிமையாளர்கள் செலவிடுகிறார்கள்.
ஆனால், இத்தனையையும் மீறிதான் இந்த பேட்டிங் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்து தவறு செய்தது லக்னோ அணி. அதுமட்டுமல்லாமல் இரண்டு, மூன்று ஓவர்களில் ஆடுகளத்தில் தன்மையை கணிக்காமல் இருந்தது மட்டுமின்றி, 20 ஓவரும் அதே தவறை தொடர்ந்து செய்துள்ளனர். இது எல்லாம் எதிர்கொள்ளமுடியாத தவறுகள். எத்தனை திறமை இருந்தாலும் மைதானத்தின் சூழலை கணிக்கும் அணியே வெற்றிபெறும். அதிலும் சமபலம் கொண்ட ஐபிஎல் தொடரில் திறமைக்கு சற்றும் குறைவில்லாமல் மைதானத்தின் தன்மையை கணிக்கும் திறனும் இருந்திருக்க வேண்டும்.
அதற்கு பின்னர் நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடந்த ஒன்றாகும். போட்டி நடந்த ஹைதராபாத் மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் சூழ்ந்து இருக்கும் நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது அணி தலைவர் கே.எல்.ராகுலிடம் நடந்துகொண்டது மிக மோசமான உதாரணமாக அமைந்தது.
கே.எல்.ராகுலின் கேப்டன்சி மற்றும் அவரின் பேட்டிங் மிக மோசமாக அமைந்தது என்றாலும், அந்த அதிருப்தியை பொதுவெளியில் அணி உரிமையாளர் காட்டியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் இது கே.எல்.ராகுலின் மனநிலையை மட்டுமல்ல, அந்த அணியின் மன உறுதியை கூட குலைக்கும். ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 16 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவங்கள் நடைபெற்றதில்லை.
விளையாட்டு போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் சாதாரணமானது என்ற சிறிய உண்மை கூட புரியாதவர்கள் ஒரு அணியின் உரிமையாளராக இருக்கிறார்கள் என்பதை விட அந்த அணிக்கு மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. பொதுவாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எப்போதும் அணி நிர்வாகத்தின் நேரடியாக தலையிட்டதில்லை.
அதற்கென CEO என்ற பதவியை ஒதுக்கி அவர்கள் மூலமே அணி வீரர்களுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தொடர்பில் உள்ளனர். இதில் விதிவிலக்காக ஆகாஷ் அதானி, ப்ரீத்தி ஜிந்தா, ஷாருக்கான், காவியா மாறன் போன்ற அணி உரிமையாளர்கள் அணி வீரர்களுடன் தொடர்பில் இருந்தால் கூட அவர்கள் வீரர்களிடம் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தியதில்லை. அவர்களும் நிர்வாகிகள் வழியாகவே வீரர்களுடன் தொடர்புகொள்கிறார்கள்.
இதற்கு முன்னர் இதுபோல வீரர்களை அணி உரிமையாளர்கள் விமர்சித்திருக்கலாம். ஆனால், அது மூடிய அறைக்குள் நிகழ்ந்திருக்கும் என்பதால் அது விவாதமாகவில்லை. இப்போதும் அதே போன்று மூடிய அறைக்குள் சஞ்சீவ் கோயங்கா - ராகுல் விவாதம் நடைபெற்றிருந்தால் அதை பற்றி யாரும் பேசப்போவதில்லை. ராகுலும் இன்றோ நேற்றோ வந்த வீரர் அல்ல.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், கோலி - ரோஹித்- தோனி போல ராகுல் கோடிக்கணக்கான ரசிகர்ளை கொண்ட வீரர் அல்ல என்றாலும், அவருக்கு என சில லட்சங்களிலாவது ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த செயல் அதிருப்திக்குளாக்குவதோடு, லக்னோ அணி தனது ரசிகர்களையும் இழக்க அது வாய்ப்பாக அமையும்.
கே.எல்.ராகுல் மட்டுமல்ல, தோனியையே இதுபோல மோசமாக நடத்தியவர்தான் சஞ்சீவ் கோயங்கா. சென்னை அணி தடைசெய்யப்பட்ட காலத்தில் உருவான புனே சூப்பர் ஜையண்ட்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த சஞ்சீவ் கோயங்கா ஒரு சீசனில் அணி சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி தோனியையே கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக்கினார். இத்தனைக்கும் அப்போது தோனி இந்திய அணிக்கே கேப்டனாக ஆடிக்கொண்டிருந்தார்.
அணி உரிமையாளர்கள் இதுபோன்று செயல்பட்டு கொண்டிருந்தால் அந்த அணிக்கு தேர்வாகும் வீரர்கள் மத்தியில் ஒரு சோர்வை ஏற்படுத்தும். அதாவது மைதானத்தில் களமிறங்கும் முன்னரே தங்கள் மன உறுதியை இழந்துவிடுவார்கள். அணிக்கு எதாவது செய்யவேண்டும் என்ற உறுதி ஒரு வீரரிடம் இல்லாவிட்டால், கோடியை செலவு செய்தாலும் அந்த அணியால் கோப்பையை நெருங்கவே முடியாது. இதனை இனியாவது லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா புரிந்துகொள்வாரா என்பது வரும் காலங்களில்தான் தெரியும்,.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?