Sports

"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !

தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு நடை ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம்மாறுக்கப்பட்டதை குறிப்பிட்டு பலரும் தேர்வுக்குழுவை விமர்சித்து வந்தனர். மேலும் முன்னாள் வீரர்களும் பலரும் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், நடராஜன் இந்திய டி20 அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதிலும் யார்க்கர் வீசுவதில் அவருக்கு அதிக திறன் உள்ளது.

அவர் பந்துவீசும் போது பந்தின் வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது என தொடர்ந்து மாறுபாடுகளை செய்கிறார். ஒருமுறை மட்டுமின்றி அவர் மீண்டும் மீண்டும் அதனை செய்கிறார். அதனால் தான் அவர் இந்திய டி20 அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் நிலையாக நிற்கும் போதுகூட அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அப்டி பட்ட ஒருவர் உலகக்கோப்பை தொடரில் விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்தியா மட்டுமல்ல உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைவர்கள்"என்று கூறியுள்ளார்.

Also Read: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !