Sports
11 வீரர்களுக்கு பதில் 5 வீரர்கள்: பார்ம் இல்லாத அணியை கொண்டு உலககோப்பைக்கு செல்லும் இந்தியா - ஒரு பார்வை!
கிரிக்கெட்டின் மூன்று விதமான பிரிவுகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுவது டி20 கிரிக்கெட் போட்டிகள்தான். ஆரம்பத்தில் கிரிக்கெட்டின் நேரத்தை குறைக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த வகை போட்டிகள், ரசிகர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றதால் உலக கிரிக்கெட்டின் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐசிசி டி20 போட்டிகளை சர்வதேச அந்தஸ்து கொண்டதாக அறிவித்ததோடு அதற்க்கு என உலகக்கோப்பை தொடரையும் அறிவித்தது.
டி20 போட்டிகளின் வெற்றியைத் தொடர்ந்து பிசிசிஐ, கால்பந்து பாணியில் ஐபிஎல் என்ற தொடரை ஆரம்பித்தது. அதன் பின்னர் ஐபிஎல் பிசிசிஐ-க்கு பெற்றுத்தந்தது வெறும் பணத்தை மட்டும் அல்ல, ஐசிசி அமைப்பையே கட்டுப்படுத்தும் அளவு அதிகாரத்தையும் பெற்றுத்தந்தது. தற்போதைய நிலையில், ஐசிசி அமைப்பை விட பிசிசிஐதான் சக்திவாய்ந்த அமைப்பாக உள்ளது.
பிசிசிஐ இந்த அளவு வளர்ந்த நிலையிலும் இந்திய அணியால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஐசிசி உலககோப்பையையும் வெல்லமுடியவில்லை. ஐபிஎல் தொடர் வந்தபிறகு பெயர் தெரியாத வீரர் கூட தனது சிறப்பான ஆட்டத்தால் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிடுகிறார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பிசிசிஐ அளிக்கிறதா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
முன்னர் டொமெஸ்டிக் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்கள்தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஐபிஎல் வந்த பின்னர் டொமெஸ்டிக் போட்டிகளின் இடத்தை ஐபிஎல் பெற்றது. ஆனால், தற்போது ஐபிஎல் தொடரின் இடத்தை ஒரு வீரரின் நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டதோ என்ற கேள்விதான் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பை பார்க்கும்போது எழுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கேப்டன் ருத்துராஜ் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். ஆனால், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவரை கூட பல மடங்கு மோசமாக ஆடிவரும் கில்லுக்கு இந்திய அணியில் ரிசர்வ் வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதை விட மோசமானது நடராஜனுக்கு நடந்ததுதான். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியினை நடராஜன் வசப்படுத்தியுள்ளார். மேலும் பும்ராவுக்கு பின்னர் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரராகவும் நடராஜன்தான் இருந்துள்ளார். இது தவிர சர்வதேச அளவிலும் தன்னை நடராஜன் நிரூபித்துள்ளார். ஆனால் பார்ம் என்றால் என்ன என்று கேட்டும் சிராஜ், அர்ஸதீப் சிங், கலீல் அகமத், ஆவேஷ் கானுக்கு எல்லாம் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிராஜாவது சர்வதேச அளவில் தன்னை நிரூபித்த வீரர், அதனால் அவர் தேர்வை நியாயப்படுத்த முடியும். பிறரின் தேர்வை என்ன சொல்வது. இது மட்டுமல்ல இதில் அர்ஸதீப் சிங்கை தவிர யாரும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் கூட இல்லை. விக்கெட்டுகளில் மட்டும் அல்ல, ஒரு ஓவரில் கொடுக்கப்படும் சராசரி ரன்னில் கூட நடராஜனுக்கு முன்னர் பும்ராவை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் இல்லை.
சிராஜ் ஓவருக்கு சராசரியாக 9.50 ரன்களையும், அர்ஷ்தீப் சிங் 9.68 ரன்களையும் சராசரியாக விட்டுக்கொடுத்துள்ளனர். ஆனால் நடராஜன் ஓவருக்கு 9 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இதில் நடராஜன் இறுதிகட்டத்தில் மட்டுமே அதிக ஓவர்கள் வீசுகிறார் என்பதும், அதும் அவர் ஆடியுள்ள மைதானம் 270 ரன்கள் அசால்டாக எடுக்கக்கூடிய பேட்டிங்கின் சொர்க்கபுரியாத ஹைதராபாத் மைதானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தவிர்த்து கடந்த அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத ஹர்திக் பாண்டியாவுக்கு அணியில் இடம் கிடைத்திருப்பதோடு, துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அவர் மும்பை அணியில் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என அனைத்திலும் சொதப்பி வருகிறார். அதே போலத்தான் சூர்யகுமார் நிலையும்.
ஆனால், ஐபிஎல் தொடர் மட்டுமின்றி கடந்த ஒரு ஆண்டாக கொல்கத்தா அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் பல போட்டிகளில் வென்று கொடுத்த ரிங்கு சிங்குக்கு அணியில் ரிசர்வ் வீரராக மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்திய தேர்வு குழு பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளது என்றாலும் இந்த முறை அதீத விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
உலகக்கோப்பை நடக்கும் அமெரிக்க மைதானம் குறித்து யாரும் பெரிதாக அறிந்திருக்கமாட்டார்கள் என்றாலும், மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. சமீபத்தில் நடந்த கரிபியன் லீக்கில் கூட அதிக விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களே எடுத்துள்ளனர். ஆனால் அங்கு நடைபெறும் உலககோப்பைக்கு இந்திய அணி வெறும் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே செல்கிறது. எப்படியும் அணியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மேல் ஆடும் 11 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறமாட்டார்கள் என்றாலும் அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கு காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. அமெரிக்கா சென்று சொல்கிறேன் என அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார். ஒருவேளை அவர்களை அணியில் எடுத்ததற்காக காரணம் இப்போதுவரை கேப்டனுக்கே தெரியவில்லையா என்பது நமக்கு தெரியவில்லை.
இந்திய அணி எப்போதும் கோப்பையை வெல்லும் அணி என்றே சொல்லப்படும். ஆனால், இந்தமுறை அரையிறுதிக்கே இந்திய அணி செல்லுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ரோஹித் சர்மா, சூரியகுமார் , ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அர்ஷிதீப் சிங், சிராஜ் என அணியில் ஆடக்கூடிய 11 வீரர்களில் 6 பேர் பார்மில் இல்லாமல் இருக்கிறார்கள். ஆக மீதம் இருக்கும் வெறும் 5 பேரை நம்பியே இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க செல்கிறது . இந்த அணி உலகக்கோப்பையை வென்றால் அது எப்படி 1983-ல் இந்தியா முதல்முறையாக உலககோப்பையை வென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ, அதே போல மற்றொரு அதிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் உண்மையானது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!