Sports

"எங்களின் சமாதானம் சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது"- கம்பீருடனான மோதல் குறித்துப் பேசிய விராட் கோலி !

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து லக்னோ மைதானத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை கம்பீர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி கம்பீரிடம் ஏதோ கூற கோலிக்கும் கம்பீருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர். இந்த விவகாரம் அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் எதிரொலித்தது. அதன்பின்னர் இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடரில் நவீன் உல் காக் மற்றும் விராட் கோலி ஆகியோர் கட்டியணைந்து தங்கள் சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர். அதே போல தற்போதைய ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி - கம்பீர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில், எங்களின் சமாதானம் சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்று விராட் கோலி கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறிய அவர், "நவீன் உல் ஹக் மற்றும் கம்பீர் ஆகிய இருவரையும் கட்டியணைத்தேன். இதன் மூலம் உங்களுக்கிடையில் இருந்த எல்லா சச்சரவுகளும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் எங்களின் சமாதானம் சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார். .