Sports

உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் யார் ? - பந்துவீச்சாளரை கை காட்டிய தினேஷ் கார்த்திக் !

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அதோடு ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

இந்த நிலையில், உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் என்றார் அது பும்ராதான் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி மிக அதிகபட்ச திறமையை வெளிக்காட்ட கூடியவராக பும்ரா மட்டுமே இருக்கிறார். இதன் காரணத்தினால்தான் தற்போது உலகின் மிக மதிப்புமிக்க வீரராக நான் அவரை கருதுகிறேன்.

எந்த ஒரு பாகுபாடுமின்றி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது திறமையால் பெரிய தாக்கங்களை உருவாக்குகிறார். தற்பொழுது இப்படி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் செயல்படக்கூடியவர்கள் வேறு யாரும் இல்லை. எனவே பும்ராதான் உலகின் மிகச்சிறந்த வீரராக இந்த காலகட்டத்தில் இருக்கிறா"என்று கூறியுள்ளார்.

Also Read: சேப்பாக்கத்தில் PRANK செய்த ஜடேஜா - தோனி : அம்பலப்படுத்திய துஷார் தேஷ்பாண்டே : நடந்தது என்ன ?