Sports

"ரிஷப் பண்ட் தற்போது ரன்களை எடுத்தாலும் விக்கெட்டை பறிகொடுக்கிறார்"- வீரேந்திர சேவாக் கருத்து !

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.

அதன் பின்னர் காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்றார். தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி வருகிறார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி தனது உடல்தகுதியை நிரூபித்தார். தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அரை சதம் விளாசினார். ஆனால், அந்த போட்டியில் டெல்லி அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் தற்போது ரன்களை எடுத்தாலும் விக்கெட்டைக் பறிகொடுக்கிறார் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " ரிஷப் பண்ட்டின் இன்னிங்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. முதல் இரண்டு ஆட்டங்களில் நீங்கள் அதிகம் ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், இப்போது ரன்களை எடுக்கிறார். ஆனால், அவரது விக்கெட்டைக் பறி கொடுக்கிறார்.

கடந்த போட்டியில் ரிஷப் பண்ட் சதத்தை எட்டியிருக்க வேண்டும். ரன்கள் வந்துகொண்டிருந்தது. அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார். டெல்லி அணி முதல் பந்தை ஆடும் முன்பே தோற்பது உறுதியாகிவிட்டது. இதனால் அவர் அடுத்து வரும் போட்டிக்கு தயாராகும் வகையில் கூடுதளாக 20 பந்துகள் விளையாடியிருக்கலாம்"என்று கூறியுள்ளார்.

Also Read: நான் தவறுதலாக வாங்கப்பட்ட வீரர் அல்ல, கட்டாயம் வாங்கவேண்டிய வீரர் : சினிமாவை விஞ்சிய IPL ஹீரோ !