Sports

ரஷீத் கானுக்கு எதிராக அப்படி ஒரு ஆட்டம், அவருக்கு பயம் என்பதே இல்லை- CSK இளம் வீரரைப் பாராட்டிய மைக் ஹசி!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற 20 வயது வீரரை வாங்க ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணியும், சென்னை அணியும் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் குஜராத் அணி பின்வாங்க டெல்லி அணி களத்தில் குதித்தது. ஆனால் இறுதிவரை விட்டுக்கொடுக்காத சென்னை அணி ரூ.8.40 கோடிக்கு சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்தது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி இது வரை ஒரு ரஞ்சி கோப்பை தொடரில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால், உள்ளூர் லீக் மற்றும் சையத் முஸ்டாக் அலி தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பிடித்தார்.

இதில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை கூட அச்சுறுத்தி வரும் ரஷீத் கானின் பந்தை ஐபிஎல் தொடரில் தனது முதல் பந்தாக ரிஸ்வி எதிர்கொண்டார். ஆனால், எந்த பதற்றமும் இன்று அந்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். மேலும் ரஷித் கானின் ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் விளாசினார்.

இந்த நிலையில், சமீர் ரிஸ்வி பயமில்லாமல் ஆடுகிறார் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சமீர் ரிஸ்விக்கு இயற்கையாக அதிரடியாக விளையாடி அட்டாக் செய்யும் திறன் உள்ளது. அவரால் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகப்பெரிய சிக்சரை விளாச முடியும் என்பதோடு, பந்தை சரியாக டைம் செய்ய முடிகிறது.

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வியை களமிறக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு அற்புதமானது . தோனி களமிறங்குவார் என்றே நினைத்திருந்த நேரத்தில் ரிஸ்வியின் அதிரடி காரணமாக முடிவு மாற்றப்பட்டது. அதற்கேற்ப அவரும் 2 சிக்சரை விளாசினார். அதுவும் டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலரான ரஷீத் கானுக்கு எதிராக முதல் போட்டியிலேயே அவர் அவ்வாறு அட்டாக் செய்தது அவர் பயமில்லாமல் ஆடுகிறார் என்பதை காட்டியது"என்று கூறியுள்ளார்.

Also Read: ஆட்சியின் கடைசி நேரத்திலும் அதானிக்காக உழைக்கும் மோடி : ஒடிசா துறைமுகத்தை கைப்பற்றிய அதானி குழுமம் !