Sports

மும்பை அணிக்கு எதிராக பேட்டிங், பௌலிங் என அசத்திய தமிழ்நாடு வீரர்கள் : ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல் !

ஐபிஎல் தொடரின் பெரும் வெற்றிக்கு பிறகு அதனை இன்னும் விரிவாக்கவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன.

இதில் குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. முதல் இரண்டு சீசன்களாக அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குஜராத் அணியின் கேப்டனாக சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு குஜராத் அணியில் அதிகளவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர், ஷாருக்கான், சந்தீப் வாரியார் ஆகிய வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகிய மூன்று தமிழ்நாடு வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதே போல பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் சாய் கிஷோர் 4 ஓவர்களுக்கு 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த மும்பையின் முக்கிய வீரரான ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், ஆட்டநாயகன் விருது தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.

Also Read: MIvsGT : ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கிண்டல் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா - நடந்தது என்ன ?