Sports

"பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வெடுக்கவே அஞ்சுவார்கள்," அதற்கு காரணம் இதுதான் - நட்சத்திர வீரர் கருத்து !

கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளில் ஒன்று பாகிஸ்தான். ஆனால், அங்கு கிரிக்கெட்டின் வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட் சீரழிந்தது காரணமாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் வாரியம் போதிய ஆதரவு கொடுக்காததும் காரணமாக கூறப்படுகிறது.

அணியின் முக்கிய வீரர் தொடர்ந்து சில போட்டிகளில் சோடை போனால் கூட, அவர் அணியில் இருந்து நீக்கப்படுவது தொடர்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டு வீரர்கள் சுயநலமாக ஆடுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் வாரியமும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு தேவை என்று தெரிந்தாலும் கூட, ஓய்வெடுக்க பயப்படுகிறார்கள் என பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " மற்ற கிரிக்கெட் நாடுகளில் ஒரு வீரருக்கு ஓய்வளிக்கப்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக வந்து விளையாடும் வீரர் நன்றாக விளையாடினாலும் கூட, ஓய்வெடுத்த முக்கிய வீரருக்கு மீண்டும் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உடனே கொடுக்கப்படும்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. உங்களுடைய இடத்தில் யாராவது வந்து ஓரிரு போட்டிகள் நன்றாக விளையாடினால், அவர் உங்களுக்கு பதிலாக நிரந்தர வீரராக மாறுவார். இதனால் உண்மையாகவே எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு தேவை என்று தெரிந்தாலும் கூட, ஓய்வெடுக்க பயப்படுகிறார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு வீரர் தனக்கு உடம்பு முடியாவிட்டால் அது குறித்து கூறினால், உடனே அவரது அர்ப்பணிப்பு உணர்வு கேள்விக்குறியாகி விடும். அனைவரும் அவரை விமர்சிப்பார்கள். ஒரு தொடருக்கு முன்பாக ஒரு வீரர் எத்தனை போட்டிகளில் விளையாடலாம் என்பதை பிசியோ மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் முடிவு செய்ய வேண்டும். இது குழப்பத்தை நீக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "என் வாழ்வின் திரும்புமுனையாக மாறிய அந்த நாள்" -CSK குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அஸ்வின் !