Sports

"நான் Bowler, அவர் Batsman" : ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்துள்ளது - அஸ்வின் குறித்து பேசிய ரோகித் சர்மா !

இன்று தரம்சாலாவில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதன் மூலம் 100-டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை படைத்துள்ளார். 6 நவம்பர் 2011-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்டில் அறிமுகமான அஸ்வின் நூறாவது டெஸ்ட் என்கின்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100-வது போட்டிக்கான தொப்பியை அஸ்வினுக்கு வழங்கினார். மேலும் அணி வீரர்கள் அஸ்வினுக்கு சிறப்பு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அஸ்வினின் மனைவி மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

100-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் அஸ்வினுக்கு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித்சர்மா அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "நூறாவது டெஸ்ட் என்கின்ற மைல் கல்லை எட்டிய அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்கள். இது அவரின் உழைப்பால் கிடைத்த பெருமை.இப்படிப்பட்ட ஒருவர் உங்கள் அணியில் இருந்தால் நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டிய தேவையே கிடையாது.

நாங்கள் இருவரும் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிகளில் இருந்தே அதிகம் சந்தித்து வருகிறோம். நான் அப்போது பந்து வீச்சாளராக இருந்தேன். அவர் தொடக்க வீரராக இருந்தார். ஆனால், அதன் பின்னர் நான் பேட்ஸ்மேனாக மாறினேன். அவர் பந்துவீச்சாளராக மாறினார். தலைகீழாக நடந்த விஷயம் இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மையாக நடந்திருக்கிறது.

போட்டிக்கு முன்பாக கூட ஒற்றை ஸ்டெம்பை வைத்து குறைந்தது 40 நிமிடங்களுக்கு மேலே பந்து வீசிக் கொண்டு இருப்பார். அஸ்வின் அணிக்கு வந்ததிலிருந்து இதைச் செய்து கொண்டிருக்கிறார். அதனை நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். அவர் கையில் பந்தை கொடுத்தால் அவரை ஃபீல்டிங் அமைத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவார். அந்த அளவுக்கு அவர் திறமையான வீரர்" என்று கூறியுள்ளார்.

Also Read: ரஞ்சி கோப்பை தோல்வி : தமிழ்நாடு கேப்டனை விமர்சித்த மும்பை பயிற்சியாளர் - கொதித்தெழுந்த முன்னாள் வீரர்கள்!