Sports

"தொடரை தோற்றாலும், நாங்கள் பின்னோக்கி செல்லவில்லை" - இங். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து !

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.

தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து நாளை இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் தோற்றாலும் அதற்கு நாங்கள் பின்னோக்கி சென்று விட்டோம் என்று அர்த்தம் இல்லை என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "இந்த தொடரில் நங்கள் 3-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறோம். ஆனால், இதற்கு நாங்கள் பின்னோக்கி சென்று விட்டோம் என்று அர்த்தம் கிடையாது. இந்தியாவிற்கு எதிரான இந்தத் தொடரில் ஒரு அணியாக நாங்கள் முன்னேறி இருக்கிறோம். ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய சுற்றுப்பயணத்தில் ஒட்டுமொத்தமாக அணியாக நாங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளோம்.

நாளை ஜானி பேர்ஸ்டோ 100 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். இது அவருக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும். இந்த தருணத்தை காண அவரின் குடும்பமே இங்கு வரவுள்ளது. இந்த பெருமைக்கு அவர் முற்றிலும் தகுதியான வீரர்தான்" என்று கூறியுள்ளார்.

Also Read: வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது - IPL அனுபவம் குறித்து தோனி கருத்து !