Sports

"மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும்" - முன்னாள் இந்திய வீரர் கருத்து !

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் பார்திவ் படேல் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக அதன் அறிமுக தொடரில் வழிநடத்தி கோப்பையை வென்ற விதம் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியாவின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது வெற்றி கிடையாது. கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே மும்பை அணிக்கு வெற்றி. மும்பை அணி கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து, அணியை வழிநடத்தப் போகும் ஹர்திக் பாண்டியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல" - இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் காட்டம் !