Sports

ரஞ்சி கோப்பை : 6 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு - அசத்தும் இளம் வீரர்கள் !

உள்நாட்டில் நடக்கும் புகழ்பெற்ற ரஞ்சி தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி ரஞ்சி தொடரில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டையே தந்து வருகிறது.

அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக காலிறுதிக்கு கூட செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இதன் காரணமாக தமிழ்நாடு அணியை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், சாய் கிஷோர் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் பங்கேற்றது.

இதில் முதல் போட்டியிலேயே குஜராத் அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தியது. தொடர்ந்து திரிபுரா அணிக்கு எதிரான போட்டி டிரா ஆன நிலையில், அடுத்ததாக ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

பின்னர், சண்டிகர், கோவா அணிகளை வீழ்த்திய தமிழ்நாடு அணி, அடுத்து கர்நாடக அணியுடனான போட்டியை டிரா செய்தது. அப்போதே தமிழ்நாடு அணியின் காலிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியான நிலையில், கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை சந்தித்தது.

பஞ்சாப் அணியுடனான போட்டியிலும் அபாரமாக செயல்பட்ட தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. காலிறுதியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிரா அணியை சந்திக்கவுள்ளது.

Also Read: "ஏன் இதற்கு முன் யாரும் அதிரடியாக ஆடவில்லையா ? " - இங்கிலாந்து வீரரை விமர்சித்த முன்னாள் கேப்டன் !