Sports

குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா இடத்தை இந்த தமிழ்நாடு வீரர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர் கணிப்பு !

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா இடத்தை தமிழ்நாடு வீரர் நிரப்புவார் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா சென்றது அந்த அணிக்கு பெரும் இழப்புதான். ஆனால், ஹர்திக் பாண்டியா இடத்தை விஜய் சங்கர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம். ஹர்திக் பாண்டியாவிற்கு கீழ் விளையாடியபோது விஜய் சங்கர் நிறைய கற்றிருப்பார்.

குஜராத் அணிக்காக 2 சீசன்களில் ஹர்திக் பாண்டியா செய்ததை விஜய் சங்கரால் செய்ய முடியும். அதற்காக ஹர்திக் பாண்டியா அளவுக்கு விஜய் சங்கரால் செயல்படமுடியும் என்று சொல்லவில்லை. ஆனால் 80 சதவித தாக்கத்தை அவரால் கொடுக்க முடியும். கடந்த சீசனில் 10 இன்னிங்ஸில் 301 ரன்களை விஜய் சங்கர் குவித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

Also Read: "இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது"- இங். முன்னாள் வீரர் கருத்து !