Sports

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் : வரலாறு படைத்த பும்ரா !

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது. மேலும், டெஸ்ட் போட்டிகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

இந்த நிலையில், ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா பெற்றுள்ளார்.

அது தவிர 3 விதமாக கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து பும்ரா அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக ஒருநாள் மற்றும் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பும்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்திக்கும்" - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து !