Sports

"இங்கு பந்து முதல் நாளிலேயே திரும்புகிறது" - மீண்டும் இந்திய ஆடுகளத்தை குறைகூறிய இங்கிலாந்து வீரர் !

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இங்கிலாந்து அணியை விட 190 ரன்களை முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய ஆடுகளத்தில் தன்மையை புரிந்துகொண்டு சிறப்பாக ஆடியது. இன்று மூன்றாம் நாள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்துள்ளது.

அபாரமாக ஆடிய இங்கிலாந்து வீரர் ஓலி போப் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல மைதானம் குறித்த தனது அதிருப்தியை இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "இந்தியாவில் முதல் நாளிலிருந்தே அது சுழன்றதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.

நான் பாகிஸ்தானிலும் விளையாடியுள்ளேன். அங்கேயும் இங்கேயும் சூழ்நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் சற்று அதிகமாக சுழல்கிறது. பாகிஸ்தானில் பந்து வழுக்கி கொண்டு ரிவர்ஸ் ஸ்விங் ஆனது"என்று கூறியுள்ளார். முன்னதாக இந்த முறை மைதானங்களை பற்றி குறை ஏதும் சொல்லமாட்டோம் என ஜாக் கிராவ்லி முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முச்சதம் விளாசிய தமிழக வீரர் : இமாலய ரன் குவிப்பில் தமிழ்நாடு அணி... ரஞ்சி கோப்பையில் அபாரம் !