Sports

4 ஆண்டுக்கான விருதுகளை ஒரே நாளில் வழங்கிய பிசிசிஐ : விருது வென்ற வீரர், வீராங்கனைகள் யார் யார் ?

உலகளவில் கால்பந்து பிரபலமான விளையாட்டாக இருக்கும் நிலையில், தென்னிந்தியாவில் கிரிக்கெட்டே பிரதானமாக விளையாட்டாக இருக்கிறது. அதிலும் இந்தியாவில் மதம் என்று சொல்லும் அளவு மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது.

இதனால் உலகளவில் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக, இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை கட்டுப்படுத்தும் பிசிசிஐ அமைப்பு இருந்து வருகிறது. பிசிசிஐ அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆண்டுகளுக்கான விருதுகளை பிசிசிஐ நேற்று ஒரே நாளில் வழங்கியது. இந்த விழாவில், 'சி.கே.நாயுடு' வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

2019-20ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது முகமது ஷமிக்கும், 2020-21ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருது சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட்டன.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை 2019-20 ஆண்டுக்கு தீப்தி ஷர்மாவும், 2020-22 க்கு ஸ்மிருதி மந்தனாவுக்கும் 2022-2023 க்கு தீப்தி ஷர்மாவுக்கும் வழங்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் சிறந்த அறிமுக வீரருக்கான விருதை மயங்க் அகர்வால் (2019-20), அக்‌ஷர் படேல் (2020-21), ஸ்ரேயஷ் ஐயர் (2021-22), அமஞ்சோத் கௌர் (2022-23) ஆகியோர் வென்றனர்.

அதே போல 2022-2023-ம் ஆண்டுக்கான ஒரு தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் என சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் திலீப் சர்தேசாய் விருது தமிழ்நாடு வீரர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

Also Read: "இந்திய மைதானங்களில் bazball அதிரடி எல்லாம் வேலைக்கு ஆகாது"- ஹர்பஜன் சிங் கருத்து !