Sports

உலகக்கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸிக்கு கெளரவம் : அவரின் ஜெர்சிக்கு நிரந்தர ஓய்வு அறிவித்த அர்ஜென்டினா !

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

அதில், இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது.

அதிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

இதன் மூலம் 3-ம் முறையாக அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடிய மெஸ்ஸி தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார். மேலும், அவரின் அபார ஆட்டமே அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது. மேலும், மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கோபா அமெரிக்கா, பைனலிசிமா ஆகிய கோப்பைகளை வென்றுள்ளார். அதோடு சர்வதேச அரங்கில் அர்ஜென்டினா சார்பில் அதிக கோல் அடித்த வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்காக பல்வேறு சாதனைகள் படைத்த மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அவர் அணிந்து விளையாடிய 10-ம் எண் கொண்ட அர்ஜென்டினா ஜெர்சிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி மெஸ்ஸியின் ஓய்வுக்கு பின்னர் அர்ஜென்டினா அணியில் 10-ம் எண் கொண்ட ஜெர்சியை இனி யாரும் அணியமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் வீரர் மரடோனாவும் 10-ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திமுகவின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்துக்கு தடை கோரி வழக்கு- அதிரடியாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!