Sports

பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் பாஜக அரசு: அர்ஜுனா விருதை நடுரோட்டில் வைத்து சென்ற மல்யுத்த வீராங்கனை !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் வைத்துக் கடந்த மே மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியபோது கூட இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

மேலும் போலிஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்த்தது பாஜக அரசு. ஆனால் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தினர். புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து தாங்கள் வென்ற பதக்கங்களைக் கங்கையில் ஆற்றில் வீசுவதற்காகச் சென்றனர். அப்போது அவர் விவசாயச் சங்கத் தலைவர்கள் சமாதானப்படுத்தி அவர்களது பதக்கங்களை வாங்கிக் கொண்டனர். இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஆனால் சரியாக விசாரணையை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பினை சர்வதேச மல்யுத்த நிர்வாக அமைப்பான united world wretling இடைநீக்கம் செய்தது.

அதனைத் தொடர்ந்து டிச.21-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலின் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றிபெற்றார். இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இனி மல்யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தார். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாத் ஆகியோர் தங்கள் அர்ஜுனா மற்றும் பத்ம விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தனர்.

இதனால் ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்து அறிவித்தது. மேலும் பூபேந்திர சிங் பஜ்வா என்பவரின் தலைமையில் இடைக்கால குழு ஒன்றையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது.

இதனிடையே உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருப்பி அளிக்கப்போவதாக கூறியிருந்தார். அதன்படி இன்று பிரதமர் மோடியின் அலுவலகம் நோக்கி அவர் சென்றுள்ளார்.

அப்போது அவரை போலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் வேறு வழியின்றி தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை டெல்லியின் கர்தவ்யா பிரதான சாலையில் வைத்துவிட்டுச் சென்றார். பின்னர் போலிஸார் அந்த விருதுகளை கையகப்படுத்தினர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.