Sports

"எங்கள் தோல்வியால் ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது" - உலகக்கோப்பை குறித்து முஹம்மது ஷமி விரக்தி !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் இந்தியா சிறப்பாக ஆடி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி பல்வேறு இந்தியர்களின் இருதயத்தை நொறுக்கியது. இந்த நிலையில், எங்கள் தோல்வியால் ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான முஹம்மது ஷமிகூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது. தொடரில் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த வெற்றி பயணத்தை இறுதி வரை தொடர நூறு சதவீதம் முயற்சித்தோம்.

ஆனால். நாம் எங்கே தவறு செய்தோம் என்பதை விளக்க முடியாது. தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து உட்கார்ந்திருந்தோம். எங்கள் இரண்டு மாத கடின உழைப்பு ஒரே ஒரு போட்டியால் நிராகரிக்கப்பட்டதைப் போல இருந்தது. இது எங்களின் மோசமான நாளாக அமைந்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: திடீரென காணாமல் போன 3-ம் நடுவர் : தாமதமாக தொடங்கிய போட்டி.. PAKvsAUS போட்டியில் நடந்தது என்ன ?