Sports

பெயர் குழப்பத்தால் தவறான வீரரை வாங்கிய பஞ்சாப் அணி.. IPL ஏலத்தில் அதிர்ச்சி சம்பவம் - முழு விவரம் என்ன ?

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர். ஏலத்தின் போது சர்வதேச போட்டிகளை ஆடாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அப்போது இந்திய வீரரான ஷஷாங்க் சிங் என்பவரின் பெயரை ஏலம் நடத்தும் மல்லிகா சாகர் உச்சரித்தார்.

அவரை அடிப்படை விலையான ரூ.10 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக ஏலதாரர் மல்லிகா அறிவித்தார். ஆனால், அப்போது தான் தாங்கள் தவறான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்த விவரம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தெரியவந்துள்ளது.

அதாவது 19 வயதான ஷஷாங்க் சிங் என்பவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. அதன் படி ஷஷாங்க் சிங் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால், அதன் பின்னரே அவர் 32 வயதுடைய மற்றொரு ஷஷாங்க் சிங் என்பது தெரியவந்துள்ளது.

இதனை உடனடியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலதாரர் மல்லிகாவிடம் கூறினாலும், ஒருமுறை ஏலத்தில் எடுத்துவிட்டால் அதனை மாற்றமுடியாது என்ற விதிமுறையை கூறி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: "கனவில் கூட நினைக்காதது நடக்கிறது" - CSK அணியில் இணைந்தது குறித்து இளம்வீரர்கள் நெகிழ்ச்சி !