Sports

"உலகக்கோப்பை தோல்வி கொடுத்த வலியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை" - ரோஹித் சர்மா விரக்தி !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் இந்தியா சிறப்பாக ஆடி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி பல்வேறு இந்தியர்களின் இருதயத்தை நொறுக்கியது. இந்த நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி கொடுத்த மனவலியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்துப் வீடியோ வெளியிட்டுள்ள ரோஹித் சர்மா , "உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் அதிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்கு தெரியவில்லை. குடும்பத்தினர், நண்பர்கள் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். தோல்வியிலிருந்து மீள்வது என்று எனக்கு தெரியவில்லை. தோல்வி கொடுத்த மனவலியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை. ஒரு அணியாக நாங்கள் இத்தனை வருடங்கள் உலகக் கோப்பைக்காக கடுமையாக உழைத்தும் கனவை எட்டமுடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.

இறுதிப் போட்டியில் என்ன தவறு செய்தோம் என்று கேட்டால், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். ஆனாலும்,எல்லா நேரங்களிலும் நமது திட்டப்படி போட்டி அமையாது.உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினோம். எனது அணியை நினைத்து பெருமை படுகிறேன். உலகக் கோப்பை தொடர் நடந்த அந்த ஒன்றரை மாதங்களும் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை பாராட்ட வேண்டும். ஆனால், எப்போதும் தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் திரும்பாது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மக்களின் ஆதரவு மட்டுமே உறுதுணையாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசி தாக்குதல் : நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?