Sports
"இந்தியா A அணியில் கூட இடம்பெறாத அதிவேகப்பந்துவீச்சாளர்" - BCCI-யின் செயலால் கொதித்தெழுந்த ரசிகர்கள் !
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிவேக பந்துவீச்சு மூலம் கவனம் ஈர்த்தார். அதில் தொடர்ந்து தனது சிறப்பான அதிவேகப்பந்துவீச்சின் மூலம் இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இந்திய அணியிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதில் சிறப்பாக செயல்பட்டார்.
அதிலும் இலங்கை அணிக்கு சர்வதேச டி20 தொடரில் தன்னுடைய அதிவேகமான பந்துவீச்சையும் பதிவுசெய்தார். இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் வீசிய ஒரு பந்தை மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருந்தார் அவர். இதுநாள் வரை ஒரு இந்திய பௌலர் வீசிய அதிவேகமான பந்து அதுதான்.
இதன் காரணமாக உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டினர். அவர் இந்தியாவுக்கு கிடைத்த சொத்து என சர்வதேச வீரர்களும் உம்ரான் மாலிக்கை கொண்டாடினர். இந்தியாவுக்கு எதிர்காலத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வந்தார். மேலும், விக்கெட் எடுக்கவும் தொடர்ந்து தவறி வந்தார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அவரை சில போட்டிகளுக்கு வெளியே அமரவைத்தது. அதன்பின்னர் இறுதிக்கட்டத்தில் அணியில் இடம்பெற்றாலும் அதிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதனால் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த இந்திய அணிப் பட்டியலிலும் உம்ரான் மாலிக் பெயர் இடம் பெறவில்லை. அதன் உச்சமாக தென்னாபிரிக்கா செல்லும் இந்திய A அணி வீரர்கள் பட்டியலில் கூட உம்ரான் மாலிக்குக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "சில மாதங்கள் முன்பு இந்திய அணியில் இருந்த வீரருக்கு நிச்சயம் இந்தியா A அணியில் இடம் அளிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். இதே போல பல கிரிக்கெட் விமர்சகர்களும் உம்ரான் மாலிக்குக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவேண்டும் என்று கூறி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!