Sports

"ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமை தொகை ரூ.4.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும்" - IPL தலைவர் நம்பிக்கை !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்படவுள்ளதாக பிசிசிஐ அமைப்பு அறிவித்தது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் ஒளிபரப்பு உரிமையை வயகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வயகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது தவிர கடந்த 2008-இல் ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ.6,000 கோடியாக இருந்த நிலையில், 2022 முதலான 5 ஆண்டுகாலத்துக்குரிய ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில், 2043-இல் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "கடந்த 15 ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் வளர்ந்து வருகிறது. தற்போது ரசிகர்களிடம் ஐபிஎல் தொடருக்கு இருக்கும் மதிப்பை பார்க்கையில், வரும் 2043-இல் ஐபிஎல் ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன். ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் கிரிக்கெட்டை புதிதாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும். கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது, மகளிர் பிரீமியர் லீக் போட்டி தொடங்கியிருப்பது என கிரிக்கெட் சார்ந்த வருவாய் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது" என்று கூறியுள்ளார்.

Also Read: "அந்த புகைப்படத்தில் எதுவுமே இல்லை, அவ்வளவுதான்"- உலககோப்பையில் கால் வைத்தது குறித்து ஆஸ்.வீரர் கருத்து !