Sports
பல ஆண்டுகள் திட்டம் : பாஜக, BCCI-யின் அரசியல் அழுத்தத்துக்கு பலியானதா இந்திய அணி ? ஒரு பார்வை !
ஏறத்தாழ 1 லட்சம் ரசிகர்கள், சொந்த மைதானம், சொந்த நாட்டு அனுகூலங்கள் இப்படி பட்ட நிலையில், அந்த வந்து ஆடும் பிறநாட்டு வீரர்களுக்குதான் பதற்றம், பரபரப்பு இருக்க வேண்டும். ஆனால், நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஆடிய இறுதிப்போட்டியில் அப்படியே அனைத்தும் தலைகீழாக நடந்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்திய முகாம் பதட்டமாக, பரபரப்பாக இருந்தது. இத்தனைக்கும் இந்த தொடரில் தோல்வியே தழுவாமல் தொடர் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணியை ஏற்கனவே வீழ்த்தியும் இருக்கிறது. அந்த பக்கம் ஆஸ்திரேலிய அணியோ முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி, பின்னர் மீண்டெழுந்து சுமார் ரக அணியாகதான் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
அப்படி இருந்தும் இந்திய முகாமில் இருந்த பதட்டத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அழுத்தம் நிறைந்த ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் ஆடியவர்கள்தான். அதிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா எல்லாம் அழுத்தமான போட்டிகளை பலமுறை பார்த்தவர்கள்தான்.
இதற்கு முன்னர் மெல்போர்ன், அஹமதாபாத் என 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னர் பதட்டமின்றி ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தவர்கள்தான். முன்னரும் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற இடங்களில் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டியில் ஆடியிருக்கிறார்கள். அப்போது கூட போட்டிக்கு முன்னர் வீரர்கள் முகாம் வழக்கமான உற்சாகத்தோடே இருந்தது.
இதனால், 1 லட்சம் ரசிகர்கள், இறுதிப்போட்டி அழுத்தம் காரணமாக வீரர்கள் அவ்வாறு இருந்தார்கள் என்பதனையும் ஏற்க முடியாது. இதனால் போட்டிக்கு முன்னரே வீரர்களுக்கு வேறு வகையில் பிரச்னை இருந்தது என்பதாகத்தான் இதனை பார்க்க முடியும். அதை அறியும் முன்னர், இந்திய அணியின் கடந்த சில ஆண்டுகளையும் பார்க்க வேண்டும்.
இந்திய அணி இறுதியாக 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பின்னர் 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. அதன்பின்னர் ஐசிசி கோப்பை என்பதே இந்திய அணிக்கு எட்டாக்கனியாகதான் இருந்து வருகிறது. இதனிடையே, தோனியின் டெஸ்ட் ஓய்வுக்கு பின்னர் இளம் நட்சத்திரம் விராட் கோலி கேப்டனாக்கப்பட்டார். அதன் பின்னர் இந்திய அணி குறித்த பார்வையே அப்படியே மாறியது. பேட்டிங், பௌலிங் என விராட் கோலி தலைமையில் அசுரத்தனமாக டெஸ்ட் அணி கட்டமைக்கப்பட்டு, உலகம் முழுவதும் சென்று வெற்றிக்கொடி ஏற்றியது.
அதன் காரணமாக ஒருநாள், டி20 போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக்கப்பட்டார். இந்த இடத்தில் விராட் கோலியை கேப்டனாக்குவது பிசிசிஐயின் முடிவு அல்ல, அது தோனியின் முடிவு. இந்திய அணியின் எதிர்கால வளர்ச்சிக்காக விராட் கோலியை கேப்டனாக்குமாறு பிசிசிஐயை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோலி கேப்டனாக்கப்பட்டார்.
அதன்பின்னர் கோலி தலைமையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான ஆட்டங்களிலும் இந்திய அணி முதலிடம் பிடித்தது. இதுதவிர தனிப்பட்ட முறையில் விராட் கோலி வெறித்தனமாக ஃபார்மில் இருந்தார். ஆனாலும், ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என கருதப்பட்ட நிலையில், அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியைத் தழுவியது இந்தியா.
இதன் காரணமாக சச்சினுக்கு நிகராக போற்றப்பட்ட விராட் கோலிக்கு அளித்த முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைக்கத்தொடங்கியது. ஒரு காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளரையே முடிவு செய்யும் அளவு செல்வாக்கு செலுத்திய விராட் கோலி, ஐசிசி தொடர்களை வெல்லவில்லை என்ற காரணத்துக்காக அவரிடமிருந்த கேப்டன் பதவியை வலுக்கட்டாயமாக பிடுங்கியது பிசிசிஐ. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த அளவு ஒரு கேப்டன் மோசமாக நடத்தப்பட்டதில்லை. இத்தனைக்கும் உலகளவில் மூன்று விதமாக போட்டிகளிலும் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற பெருமை கூட அப்போது விராட் கோலியிடம்தான் இருந்தது. ஆனாலும், அவரை தூக்கி எரிந்தது பிசிசிஐ.
இந்த காலகட்டத்தில் பிசிசிஐ-யின் செயலாளராக இருந்தவர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கான பல கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக்கப்பட்டார். அப்போது இது குறித்து, பிசிசிஐ அதிகாரிகள் உலகக்கோப்பையை வெல்வதற்காகவே ரோஹித் சர்மா கேப்டனாக்கப்பட்டார் என்று வெளிப்படையாக கூறினர்.
ஆக, பிசிசிஐ-க்கு ஐசிசி கோப்பை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்தே வெளிப்படையாக தெரிந்தது. பொதுவாக கேப்டன் தோனி போல, ஐபிஎல் தொடர்களில் கூல் கேப்டன் என்று பெயரெடுத்தவர் ரோஹித் சர்மா. ஆனால், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா இதற்கு முன்னர் இல்லாத அளவு ஆக்ரோஷமாக செயல்பட்டார். இதன்மூலம் பிசிசிஐ எந்த அளவு உலகக்கோப்பைக்காக இந்திய வீரர்கள் மீது அழுத்தத்தை செலுத்தியிருக்கும் என்பதை உணர முடிகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையிலே அப்படி என்றால், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையில் எத்தகைய அழுத்தம் இருந்திருக்கும். அதிலும் இந்த உலகக்கோப்பையில் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் தாண்டவமாடியது. இந்த உலகக்கோப்பையை கருத்தில் கொண்டே குஜராத்தின் அஹமதாபாத்தில் இருந்த வல்லபாய் படேல் மைதானம் இடிக்கப்பட்டு, 1 லட்சத்துக்கு 32 ஆயிரம் பேர் அமரும் வகையில் புதிதாக கட்டப்பட்டது. அதோடு நிற்காமல், வல்லபாய் படேலின் பெயர் நீக்கப்பட்டு மோடியின் பெயர் அந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டது. அப்போதே உலகக்கோப்பை இறுதிப்போட்டி அங்குதான் நடைபெறப்போகிறது என்பது உறுதியானது.
பொதுவாக இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் என்றால், அது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்கள்தான். ஆனால், இதை எல்லாம் புறம்தள்ளி உலகக்கோப்பையின் முதல்போட்டி, இந்தியா - பாகிஸ்தான் போட்டி, இறுதிப்போட்டி ஆகிய முக்கிய போட்டிகள் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா மோதிய இறுதிபோட்டிக்கே 1 லட்சத்துக்கு 32 ஆயிரம் பேர் அமரும் இடத்தில் 92 ஆயிரம் ரசிகர்கள்தான் வந்தார்கள். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்துள்ளார்கள் என்பதில் இருந்தே அஹமதாபாத் மைதானத்தில் விளையாட்டை விட அரசியல் தான் மேலோங்கி இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
பாஜகவின் உட்சபட்ச அரசியல் தலைவரான மோடியின் சொந்த மாநிலத்தில், அவர் பெயர் தாங்கிய மைதானத்தில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே, பாஜகவின் அரசியல் என்பதை இதன் மூலம் அரசியல் தெரியாதவர் கூட உணர்ந்து கொள்வர். இதற்கு ஜெய்ஷா தலைமையில் பிசிசிஐ தீவிரமாக செயல்பட்டது.
தொடர் முழுவதும் அபாரமாக ஆடிய இந்தியா, உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பதட்டமாக இருந்ததற்கும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதற்கும் கூட பாஜகவின் இந்த மோசமான அரசியலே காரணமாக இருக்கும்.
இந்தியா ஆஸ்திரேலியா மோதிய இறுதிப்போட்டிக்கு முன்னர் உலகக்கோப்பையை மோடி ராமருக்கு அர்ப்பணிக்கும் வகையில் அவரது கைகளில் வழங்குவதை போல ஒரு கார்ட்டூன் புகைப்படம் வெளியானது. பாஜகவின் திட்டத்தை வெளிப்படுத்த இது ஒன்றே போதுமானது. எப்படி இராமர் கோவிலை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறதோ, அதே போல உலகக்கோப்பையை வைத்து ஆதாயம் தேடுவதே பாஜகவின் அரசியல்.
உண்மையில், இந்த இந்திய அணி இதற்கு முன்னர் இருந்த இந்திய அணிகளை விட வலுமிக்கது, 2003-07 வரை இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு இணையானது. பாஜக மற்றும் ஜெய் ஷாவின் பிசிசிஐ அழுத்தம் இல்லாமல் இருந்தால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கும். பாகிஸ்தான் அணிக்கு, உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டி என்றாலே அழுத்தம் அதிகமாகி இந்தியாவுக்கு எதிராக தோற்று விடுவார்கள் என்று சொல்வார்கள்.
உண்மையில் களத்தில் வீரர்களின் திறமை எந்த அளவு முக்கியமோ, அதே அளவு மனநிலையும் முக்கியம். ஆனால், பாஜக, பிசிசிஐ உள்ளிட்ட பிற அமைப்புகள், போட்டி தொடங்கும் முன்னரே இந்திய வீரர்களை அழுத்தத்துக்குள் தள்ளிவிட்டது. பாஜகவின் அரசியலுக்கு இந்திய அணியும் இறையாகிவிட்டது. விளையாட்டில் அரசியல் கலக்கவே கூடாது என்பார்கள். அப்படி கலந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்திய அணியே சாட்சி.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!