Sports
உலகசாதனை படைத்த கோலி.. ஒற்றை ஆளாக நியூஸிலாந்தை நொறுக்கிய ஷமி : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா !
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியா தான் ஆடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய அணி.
இதையடுத்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிபோட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . தொடர்ந்து தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கி சிறப்பாக ஆட்டத்தைத் தொடக்கிவைத்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய விராட் கோலி நிதானமாகத் தனது ஆட்டத்தை கில்லுடன் சேர்ந்து விளையாடினார், தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 'ரிட்டயர்' முறையில் வெளியேறினார். பிறகு வந்த ஷ்ரேயாஸ் கோலியுடன் கைகோர்த்தார்.
ஒருபக்கத்தில் சிறப்பாக ஆடிய விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சர்வதேச ஒருநாள் சதம் என்ற சாதனையை அவரின் கண் முன்னரே முறியடித்தார். கோலி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் ஸ்ரேயாஸ் அதிரடி சதம் விளாசி ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் அதிரடி 39 ரன்கள் விளாசினார். இவர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய நியூஸிலாந்தில் அணியில் டேவன் கான்வே 13 ரன்களுக்கும் , ரச்சின் ரவீந்திரா 13 ரன்களுக்கும் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். எனினும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிச்சேல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அந்த அணியை வெற்றியை நோக்கி கொண்டுசென்றனர் . டேரில் மிட்செல் 85 பந்துகளில் சதம் விளாச, ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் செல்வது போல தோற்றமளித்தது.
எனினும், கேன் வில்லியம்சன் 69 ரன்களுக்கு சமி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே லாதம் சமி பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கிளென் பிலிப்ஸ் 41 ரன்களுக்கும், டேரில் மிட்செல் 134 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதிக்கட்ட வீரர்களை இந்திய அணியுடன் விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் நியூஸிலாந்து அணி, 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய மொகமது ஷமி 9.5 ஓவர்களை வீசி 57 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!