Sports
"கடந்த கால வரலாறு பற்றி நாங்கள் யோசிக்கவே இல்லை" : INDvsNZ போட்டி குறித்து ரோஹித் சர்மா கருத்து !
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 9 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை இதுவரை வீழ்த்தியதே இல்லை என்பதால் இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "உலகக்கோப்பையின் முதல் போட்டியிலிருந்து கடைசி லீக் போட்டி வரைக்கும் எல்லா போட்டிகளும் ஒரே மாதிரியாக அழுத்தமாகத்தான் இருந்தது.
வெளியே இருக்கும் எல்லாருமே நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால்,அந்த அழுத்தத்துக்கு இரையாகாமல் அதை சிறப்பாகக் கையாண்டதால் மட்டுமே 9 போட்டிகளைக் கடந்து நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.
கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை.1983-ல் முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற போது தற்போதைய அணியின் பல வீரர்கள் பிறந்திருக்கவே இல்லை. 2011-ல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற போது இப்போதைய அணியின் வீரர்களில் பாதி பேர் கிரிக்கெட்டே ஆடத் தொடங்கவில்லை. இதுதான் எங்கள் அணியின் சிறப்பம்சம் என்று கூட நினைக்கிறேன்.
5 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது, கடந்த உலகக்கோப்பையில் என்ன நடந்தது என்பதை பற்றியெல்லாம் அணி கூட்டத்தில் விவாதிக்கவே மாட்டோம். நியூசிலாந்து அணி அவர்கள் கிரிக்கெட் ஆடும் விதத்திலும் ஆட்டத்தை அணுகும் முறையிலும் ரொம்பவே ஒழுக்கமானவர்கள். பல ஐ.சி.சி தொடர்களாக சீராக அரையிறுதி வரைக்கும் முன்னேறியிருக்கிறார்கள். இந்தச் சீரான தன்மையில்தான் அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதை நாங்களும் அறிவோம். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் என்னவென்பதை நாங்கள் ஆராய்ந்து வைத்திருக்கிறோம். அதன்படி, திட்டங்களைத் தீட்டி களத்தில் செயல்படுவோம். மூன்று ஃபார்மேட்களிலும் இதுதான் உயர்ந்தது இதுதான் தாழ்ந்தது என எந்தக் கருத்தும் எனக்கில்லை. ஆனாலும் ஒருநாள் உலகக்கோப்பைதான் எல்லாவற்றையும் விட மதிப்பு வாய்ந்தது என்பது என்னுடைய எண்ணம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!