Sports

சொந்த காசில் சூனியம் : இங்கிலாந்தின் தொடர் தோல்விக்கு காரணமான IPL அணிகள் - முழு விவரம் என்ன ?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன. அதோடு தென்னாபிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் ஐபிஎல் அணிகள் முதலீடு செய்து அணிகளை வாங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஐபிஎல் அணிகள் இங்கிலாந்து அணிக்காக ஆடும் 6 வீரர்களிடம் நாட்டுக்காக ஆடுவதை துறந்து முழுக்க முழுக்க லீக் தொடரில் ஆட ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு கூறியதாக செய்திகள் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் அமெரிக்காவில் நடைபெறவுள்ள MLC டி20 தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்தது. மேலும் பல வீரர்கள் இவ்வாறு விலக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து முக்கியமான வீரர்களை தக்கவைக்கும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீண்ட கால ஒப்பந்தத்தை தயார் செய்தது. அதன் படி சில வீரர்களுக்கு 3 ஆண்டுகள், 2 ஆண்டுகள், 1 ஆண்டு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தம் காரணமாக பல்வேறு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தத்தில் இடம் அளிக்கப்படாத இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி உலககோப்பையோடு இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்த விவகாரத்தில் ஏமாற்றமடைந்ததாகவும் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இவரைப் போல இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள சீனியர் வீரர்கள் முதல் ஜூனியர் வீரர்கள் வரை அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஓய்வறையில் வீரர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத நிலை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தாக்கமே உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Also Read: 401 ரன்கள் குவித்தும் தோல்வி: பஹர் ஸமானின் காட்டடியில் பாகிஸ்தான் வெற்றி- பரிதாப நிலையில் நியூஸிலாந்து!