Sports

"கேப்டன் ஓடி ஒளியலாமா ? அணி தலைவர் பதவி மலர் தூவிய படுக்கை அல்ல" - பாபர் அசாமை விமர்சித்த அப்ரிடி !

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்த தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கேப்டன் பாபர் அசாம் எங்கேயோ போய் ஒளிந்து கொள்ள முயற்சி செய்தால் அணி என்ன செய்யும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர் , "ஒரு கேப்டன் தான் அணிக்கு எல்லாம். ஒரு கேப்டன் பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால் மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும். ஓவர்களுக்கு இடையே வீரர்களை ஆதரித்தால் வீரர்கள் மகிழ்ச்சி அடைவர். கேப்டன் சிறப்பாக செயல்பட்டால் கேப்டன் அப்படி இருக்கும் போது, நாம் ஏன் அப்படி இருக்கக் கூடாது என நினைப்பார்கள்.

ஆனால் அதை செய்யாமல், கேப்டன் எங்கேயோ போய் ஒளிந்து கொள்ள முயற்சி செய்தால், நேர்மறையாக சிந்திக்கவில்லை என்றால் எந்த அதிசயமும் நடக்காது. அதிசயம் எல்லாம் போராட வேண்டும் என தெரிந்த தைரியமானவர்களுக்கு தான் நடக்கும். உங்கள் தேசிய அணிக்கு கேப்டனாக இருப்பது பெரிய மரியாதை. அது மலர் தூவிய படுக்கை அல்ல" என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை விமர்சித்துள்ளார்.

Also Read: "இவர்களுக்கு சிங்கிள் எடுக்கவே தெரியவில்லை, கஷ்டம்தான்" - இங்கிலாந்து அணியை விமர்சித்த ஹர்பஜன் சிங் !