Sports

"வார்னர் போல ஒருவர் அடித்து நொறுக்கி முன்னர் பார்த்ததில்லை" -பாக். முன்னாள் வீரர் அப்படி கூற காரணம் என்ன?

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இத்தகைய தோல்விகளுக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வெற்றி காண்பது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமான விஷயம் என அந்நாட்டு முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், டேவிட் வார்னருக்கு உஷாமா மிர் மிகவும் எளிதான கேட்சை தவற விட்டார். அப்போது 10 ரன்னில் இருந்த வார்னர் அதன்பின்னர் 163 ரன்களை விளாசி விட்டார். இப்படி ஒரு கேட்ச் விட்ட பின் வார்னர் போல யாரும் இவ்வளவு அடித்து நொறுக்கியதை பார்த்ததில்லை. அங்கிருந்து போட்டியின் நிலைமையே அப்படியே மாறி விட்டது.

இத்தகைய தோல்விக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வெற்றி காண்பது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமான விஷயம். பாகிஸ்தான் அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையில் மோதுகிறது. அங்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம். சுழலுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் சுமாராக இருப்பதால் சென்னையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கு சற்று அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Also Read: பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் அல்ல : சென்னை மைதானம் குறித்த ICC -யின் விமர்சனம் சரியா ? தவறா ?