Sports

உலகக்கோப்பையில் இந்த அணியைத் தோற்கடிப்பது கடினம் - பாண்டிங் கணித்த அந்த அபாயகரமான அணி எது ?

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் 3 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. இன்று இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங், பௌலிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக விளங்குகிறது. பேட்டிங்கில், துவக்க வீரர்கள், நடுவரிசை வீரர்கள் என அனைவரும் பார்மில் இருக்க பந்துவீச்சிலும் சுழற்பந்து, வேகப்பந்து வீச்சு என இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பையில் இந்திய அணியைத் தோற்கடிப்பது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பாண்டிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஐசிசி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், " இந்திய அணி வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு ஆகியவற்றில் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் ஆகியவரையும் சிறப்பாக அமைந்துள்ளது.

இதற்கு மேல், ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது அணிக்கு சாதகமானது. களத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி அவர் நடந்துக் கொள்ளும் விதத்தில் அவர் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறார். இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்த மற்ற அணிகள் சிரமப்படுவர்" என்று கூறியுள்ளார்.

Also Read: தமிழக வீரரை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடியது நினைவிருக்கிறதா? -சிவராமகிருஷ்ணனுக்கு பத்திரிகையாளர் கேள்வி