Sports
இதுதான் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் பிறருக்கும் உள்ள வித்தியாசம் - இணையத்தில் வைரலாகும் தோனியின் கருத்து!
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்களை நோக்கி குஜராத் ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமெழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக #sorry_pakistan என்ற ஹாஸ்டாக் இணையத்தில் ட்ரெண்டானது. அந்த பதிவுகளில் ஏராளமான ரசிகர்கள் 1999-ம் ஆண்டு சென்னை டெஸ்ட் போட்டியில் வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை குறிப்பிட்டு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் குஜராத் ரசிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ரசிகர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தோனி, " ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை அணியால் வாங்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. அதுதான் தமிழ்நாடு மற்றும் சென்னையின் கலாச்சாரம் பற்றி புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு அளித்தது.
ஏனென்றால் நான் பிறந்த மண்ணில் இருக்கும் கலாச்சாரம் வேறு மாதிரியான இருக்கும். எனது பெற்றோர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பின் அது உத்தரகாண்ட் என்று மாறியது. நான் ராஞ்சியில் பிறந்தேன். அது முதலில் பீகாருடன் இருந்தது. பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்துடன் பிரிக்கப்பட்டது. அதன்பின் 18 வயதில் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில்வே-யில் பணியாற்றினேன்.
அதன்பின் தான் சென்னைக்கு வந்தேன். நான் எப்படி இருக்க வேண்டும், விளையாட்டை எப்படி பாராட்ட வேண்டும் என்று தமிழ்நாடு நிறையவே கற்றுக் கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போட்டிகளின் போது ரசிகர்கள் சிறந்த ஆதரவை கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கமாக நமக்கு பிடித்த அணி மட்டுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனப்பான்மை ரசிகர்களுக்கு இருக்கும்.அதேபோல் எதிரணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் சென்னை மக்கள் அப்படியல்ல. கிரிக்கெட் விளையாட்டை புரிந்து கொண்டு பாராட்டக் கூடிய ரசிகர்கள் தமிழ்நாடு மக்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!