Sports

அதிரடி சதமடித்த ரோஹித்.. அபாரமாக ஆடிய கோலி.. ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் தனது முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித், கிஷன், ஷ்ரேயாஸ் ஆகியோர் ரன் கணக்கை துவங்காமலே ஆட்டமிழந்தனர். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி- கே.எல்.ராகுல் இணை இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றது. இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி இன்று டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா அபாரமான பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு இஷான் கிஷனும் ஒத்துழைப்பு கொடுத்தார். இஷான் கிஷன் 47 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் ஷர்மா தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அபாரமாக ஆடி ஆட்டத்தை முடித்து கொடுத்தது. அரைசதம் விளாசிய விராட் கோலி பௌண்டரி அடித்து இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். இந்திய அணி 35-வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா. இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 7 சதங்கள் விளாசி சச்சினின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். அதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லின் (553 சிக்ஸர்) சாதனையையையும் ரோஹித் சர்மா (554 சிக்ஸர்) முறியடித்துள்ளார். இது தவிர இந்திய மண்ணில் 50-வது அரைசதத்தை விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார்.