Sports

Asian Games : வரலாற்று சாதனை.. அசத்திய வீரர், வீராங்கனைகள்.. இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை ?

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கிய சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் இன்று முடிவடைய உள்ளது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த தொடர் இந்தியாவுக்கு மிகப்பெரும் வெற்றிகரமான தொடராக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ல் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்றிருந்தது. அதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்றிருந்தது.

ஆனால், இந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக 100 பதக்கங்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்திய வீரர்களின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வீரர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது X வலைத்தளத்தில், "ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டுக்காக 107 பதக்கங்களை வென்ற நமது இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகள்.இந்த போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி சர்வதேச அரங்கில் மாநிலத்துக்கு பெருமைசேர்த்துள்ளனர். உங்கள் முயற்சிகள் மற்றும் சாதனைகள் பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Also Read: "இதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" - இங்கிலாந்து மீதான வன்மத்தை கொட்டிய ஆஸ். முன்னாள் கேப்டன் !