Sports

உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இதுதான் - ஜாம்பவான் சச்சின் கணிப்பு !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.

இதனிடையே இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் கணித்துள்ளார். இதுக் குறித்துப் பேசியுள்ள அவர், " இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை கணிப்பது கடினமானது. எனினும், பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக உள்ள இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளதையும் இங்கே நாம் பார்க்கவேண்டும்.

இந்திய அணிக்கு அடுத்து வலுவாக உள்ள ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறும், அதே போல நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் அந்த அணியும் அரையிறுதிக்கு முன்னேறும்.

உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணி ஆட்டம் எப்போதுமே சிறப்பாக இருக்கும். கடந்த தொடரிலும் அவர்கள் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள். இதனால் அவர்களும் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகளையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்கள்.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா.. கபடியில் தங்கம் வென்று அசத்தல் !